பர்தா அணிந்து வந்த மாணவிகள்…அனுமதி மறுத்த நிர்வாகம்: போராட்டத்தில் இறங்கிய மாணவிகள்..கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு..!!

Author: Rajesh
16 February 2022, 3:37 pm

பெங்களூரு: கர்நாடகாவில் பர்தா அணிந்து கல்லூரிக்குள் நுழைய முயன்ற போது ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதால் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்ததால் கல்லூரி நிர்வாகம் தடை விதித்ததால் போராட்டம் வெடித்தது.

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளை யாரும் அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து கர்நாடகாவில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த திங்கள் கிழமை திறக்கப்பட்டன. இந்நிலையில், அம்மாநிலத்தின் விஜயபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியும் இன்று திறக்கப்பட்டது. அப்போது, அந்த கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் நீதிமன்ற உத்தரவை மீறி மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் பர்தா அணிந்து வந்ததால் கல்லூரிக்குள் வர அனுமதியில்லை என்று கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதனால், அந்த மாணவிகள் கல்லூரி வாயில் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எங்களுக்கு நீதி வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!