சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கு… பாஜகவின் வெற்றி செல்லாது என அறிவிப்பு… அரியணை ஏறியது ஆம்ஆத்மி!!

Author: Babu Lakshmanan
20 February 2024, 5:03 pm
Quick Share

சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை தேர்தல் அதிகாரிகள் அறிவித்த விதம் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சண்டிகர் யூனியர் பிரதேசத்தில் மேயர் தேர்தலில் பாஜகவும், இண்டியா கூட்டணியும் நேரடியாக களமிறங்கியது. இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர் குல்தீப்பும், பாஜக சார்பில் மனோஜ் சோங்கரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் + ஆம் ஆத்மி கூட்டணிக்கு 20 வாக்குகளும் பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன.

இதனால் இண்டியா கூட்டணிக்கு மேயர் பதவி கிடைக்கும் என்பதில் இரு கட்சியினரும் உறுதியாக இருந்தனர். இந்த நிலையில், தேர்தல் அதிகாரி இண்டியா கூட்டணிக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 செல்லாது என அறிவித்தார். இதன் காரணமாக, பாஜகவை சேர்ந்த வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தேர்தல் அதிகாரியின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆம்ஆத்மி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சண்டிகர் மாநகராட்சி கூட்டத்தை நடத்தி இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்ததுடன், தொடர்ந்து வழக்கை விசாரித்து வந்தது. மேலும், ஆம்ஆத்மி சமர்பித்த வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்த போது, தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டில் X என எழுதியது தெரிய வந்தது. இது தொடர்பாக நீதிபதி கேட்ட கேள்விக்கு தேர்தல் அதிகாரி பதிலளித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை தேர்தல் அதிகாரிகள் அறிவித்த விதம் சட்டவிரோதமானது என்றும், தேர்தல் அதிகாரி வேண்டுமென்றே வாக்குச்சீட்டில் முறைகேடு செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பாஜக வேட்பாளர் பெற்ற வெற்றி செல்லாது என்றும், ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளரை முறைகேடாக வெற்றி பெற்றார் என அறிவித்த தேர்தல் நடத்திய அதிகாரிக்கு எதிராக உச்சநீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டார். தேர்தல் நடத்திய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய ஆணையிட்டதுடன், நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்ததாகக் கூறி, பாஜகவின் வெற்றியை பறித்து ஆம்ஆத்மியிடம் நீதிமன்றம் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 272

0

0