உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள்.. நிவாரண தொகையை விடுவிக்க வலியுறுத்த முடிவு

Author: Babu Lakshmanan
11 January 2024, 7:59 pm
Quick Share

டெல்லியில் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி எம்பிக்களும் சந்தித்து பேசுகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிச்சாங் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

தமிழகத்தில் கடந்த மாதம் பெய்க கனமழையினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட வட மாவட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.37,907 கோடியை நிவாரணமாக தமிழக அரசு கோரியது. மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சுமார் 900 கோடியை வழங்கியது. இதையடுத்து, மத்திய குழுவினரும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினர். பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலைய திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரிடையாகவே நிவாரணத் தொகையை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் சார்பில் நேரம் ஒதுக்க கோரப்பட்டது.

இந்த நிலையில், நாளை மதியம் 3.30 மணியளவில் அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி எம்பிக்களும் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின் போது வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த உள்ளனர்.

Views: - 214

0

0