விமானம் கடத்தப்பட்டதா…? பிரான்சில் முடக்கப்பட்ட விமானம் இந்தியா வந்தது ;276 பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை

Author: Babu Lakshmanan
26 December 2023, 11:08 am
Quick Share

பிரான்சில் முடக்கப்பட்ட விமானம் 4 நாட்களுக்கு பிறகு, 276 பயணிகளுடன் இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தது.

கடந்த வியாழக்கிழமை துபாயில் இருந்து மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவாவுக்கு 303 இந்திய பயணிகள் விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இதனிடையே, எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதா? என்று பரிசோதிப்பதற்காகவும் பிரான்ஸ் நாட்டின் வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அப்போது, விமான நிலையம் வந்த பிரான்ஸ் போலீசார், துபாயில் இருந்து ஒரே சமயத்தில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிக்கராகுவா நாட்டிற்கு செல்வது குறித்து சந்தேகமடைந்தனர். மேலும் விமானப் பயணிகளிடம் 4 நாட்களாக விசாரணை நடத்தினர். முடிவில், விமானத்தில் பயணித்த அனைவரும் உரிய அனுமதி பெற்றதும், மனித கடத்தல் நடைபெறவில்லை என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, விமானத்தை விடுவிக்க பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதியளித்தது. விமானத்தில் பயணித்த பயணிகளில் 25 பேர் பிரான்சில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்தனர். எனவே, அவர்களை தவிர்த்து எஞ்சிய பயணிகளுடன் மீண்டும் விமானம் நிக்கராகுவா நாட்டிற்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்ட விமானம் இந்தியாவுக்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 276 இந்தியர்களுடன் பிரான்சில் நேற்று புறப்பட்ட விமானம், இன்று அதிகாலை 4 மணியளவில் இந்தியா வந்தது. மும்பை வந்த பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 225

0

0