திருப்பதி மலை அடிவாரத்தில் மீண்டும் பாதுகாப்பு குளறுபடி… ட்ரோன் மூலம் வீடியோ எடுத்த வடமாநிலத்தவர் ; போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
12 January 2024, 4:45 pm
Quick Share

ட்ரோன் மூலம் திருப்பதி மலை பாதையை வீடியோ எடுத்த அசாம் மாநிலத்தை சேர்ந்த நபரிடம் விஜிலன்ஸ் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி மலைக்கு செல்லும் வாகனங்களையும், அவற்றில் பயணிக்கும் பக்தர்களையும், மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி சோதனை சாவடியில் தீவிர சோதனை நடத்திய பின்னரே, மலையேறி செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், பாதயாத்திரையாக நடந்து செல்லும் பக்தர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

திருப்பதி மலையில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் ஆன புகையிலை பொருட்கள், மது, மாமிசம் மற்றும் ட்ரோன் கேமராக்கள் ஆகியவற்றை திருமலைக்கு கொண்டு செல்ல தடை அமலில் உள்ளது. அதேபோல், ஏழுமலையான் கோவிலுக்குள் செல்போன்களை கொண்டு செல்லவும், வீடியோ எடுக்கவும் தீவிர தடை அமலில் உள்ளது.

கடந்த காலங்களில் ஏழுமலையான் கோவிலுக்குள் பக்தர் ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்த விவகாரம், திருப்பதி மலையில் திடப்பொருள் கழிவு மேலாண்மை தொடர்பாக சர்வே நடத்த வந்த நபர் ஒருவர் ஏழுமலையான் கோவிலை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து விவகாரம் ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

எனவே, அப்போது முதல் திருப்பதி மலைக்கு ட்ரோன் கேமராக்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. ஆனால் இன்று அசாம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர், திருப்பதி மலையில் இருந்து திருமலைக்கு செல்லும் சாலையில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு வீடியோ எடுத்து கொண்டிருந்தார். இது பற்றிய தகவல் அறிந்து அங்கு சென்று சேர்ந்த விஜிலென்ஸ் துறையினர் அவரை பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பக்தர் தன்னுடைய காரில் ட்ரோன் கேமராவை எடுத்து செல்லும்போது, மலையடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் சரியான முறையில் சோதனை நடத்த தவறியதால், ட்ரோன் கேமராவை அந்த பக்தர் திருப்பதி மலைக்கு எடுத்து சென்று வீடியோ எடுத்ததாக தெரியவந்துள்ளது.

Views: - 220

0

0