மறுபடியும் முதல்ல இருந்தா? பரவும் அரிய வகை கொரோனா : அறிகுறிகள் இதுவா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2023, 8:47 pm
Corona New-Updatenews360
Quick Share

ஊரடங்கு, மாஸ்க், பாதிப்பு, பலி என கொரோனா கால வாழ்க்கையை மக்கள் இப்போது தான் மறந்து வருகின்றனர்.

ஆசுவாசப்படுத்தி வரும் நிலையில் மக்களை மீண்டும் கவலைக்குள் ஆழ்த்த கொரோனா புதிய திரிபான eris குறித்த செய்தி குழப்பத்தை விளைவித்துள்ளது.

கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜுலையில் 70ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி 115ஆக அதிகரித்தது. மே மாதம் இந்த புதிய திரிபு கண்டறியபட்டது.

இரண்டு மாதங்களை கடந்துவிட்ட நிலையில் கவனிக்கும்படியாக எந்த வித மாற்றத்தையும் இந்த திரிபு கொண்டுவரவில்லை. ஆனால் கோவிட் பாதிப்பாலும், தடுப்பூசியாலும் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி சற்று குறைந்திருக்கும் என்பதால் இந்தியா எச்சரிக்கையோடு இதை அணுகுவது நல்லது என்கின்றனர் சில மருத்துவர்கள்.

மருத்துவர்கள் இப்படி சொல்வதற்கு காரணம் உள்ளது. முதலில் பிரிட்டனில் தான் இந்த திரிபு கண்டுபிடிக்கபட்டது. அந்நாட்டில் மூத்த குடிமக்கள் இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவில் இந்த பாதிப்பு இருந்தது.

இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றாலும், எச்சரிக்கையோடு அணுக வேண்டும் எனவும், பூஸ்டர் ஷாட்களை எடுத்துகொள்ளவெண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புதிய மாறுபாடு குறித்த கவலை என்பது பல காரணிகளை அடிப்படையாக கொண்டது. முதலில் அதன் பரவும் தன்மை, அடுத்து அதன் தீவிரம் இறுதியாக அவற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளின் செயல்திறன் ஆகியவற்றை பொருத்தது.

வைரஸ்கள் பொதுவாகவே உருமாறும் திறன் கொண்டது என்பதால் புதிய திரிபு வருவதற்கான வாய்ப்புகள் எப்போதுமே உண்டு. இப்போதைய உருமாற்றம் அடைந்த eris வகை உலக சுகாதார அமைப்பால் உற்றுநோக்கப்பட்டுவருகிறது. இந்தியாவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம் தடுப்பூசிகளால் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி குறைந்து வருகின்றது என்கின்றனர் மருத்துவர்கள்.

சளி, இருமல்,காய்ச்சல், உள்ளிட்டவையே இவற்றின் அறிகுறிகளாக உள்ளன. பொதுவாக உருமாறும் திரிபுகள் அதிகம் பரவக்கூடியவையாக இருக்கும். ஆனால் இது ஒமைக்ரான் வகையை சேர்ந்தது என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் கருதலாம். இருப்பினும் சுகாதாரமாக இருப்பது, முககவசம் அணிதல், வெளியே சென்று வந்தால் முறையாக கை கழுவுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்றுவது முன்னெச்சரிக்கையாக பலன் தரும். தவிர டெங்கு, மலேரியா போன்ற பிற காய்ச்சல்களும் அதிகம் ஏற்படும் காலம் இது என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

Views: - 1052

0

0