மகிமைகள் நிறைந்த கார்த்திகை தீபம்: எப்படி தீபம் ஏற்றினால்…என்ன பலன் கிடைக்கும்?….

28 November 2020, 5:48 pm
karthigai deepam - updatenews360
Quick Share

கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம். கார்த்திகை மாதம் மிக, மிக புனிதமானது. கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசையாக தீப அலங்காரம் செய்வது வழக்கம்.

இதனால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி இல்லத்தில் குடி கொள்வாள் என்கிறது சாஸ்திரம். கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது தீபத் திருநாள் ஆகும். அதன்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29ஆம் தேதி) கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட உள்ளது.

கார்த்திகை தீபம் என்றாலே தீபங்கள் நிறைய ஏற்றுவது தான். கடைசி நேரத்தில் விளக்குகள் வாங்காமல் முன்கூட்டியே விளக்குகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை எண்ணுவதற்காகத்தான் இந்த தீப வழிபாடு.

பழைய விளக்குகளை வீட்டில் ஏற்றலாமா?

வீட்டில் பழைய அகல் விளக்குகள் இருந்தாலும், வருடம் வருடம் ஒரு சில புதிய விளக்குகளை வாங்கி விளக்கேற்ற வேண்டும். பழைய அகல் விளக்குகளை கொதிக்கும் நீரில் துவைக்கும் சோப்பு சிறிது போட்டு ஊற வைக்கவும். அப்போதுதான் எண்ணெய் பிசுக்கு போகும். நன்றாக தேய்த்து கழுவி காய வைக்க வேண்டும்.

புதிய அகல் விளக்கு :

புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி விளக்குகளை 4மணி நேரமாவது போட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய் கசிந்துவிடாமல் இருக்கும். 4மணி நேரம் கழித்து விளக்குகளை நன்றாக தேய்த்து கழுவவும்.

கழுவியதை மின் விசிறி இருக்கும் இடத்திலோ அல்லது வெயில் படும் இடத்திலோ காய வைத்து எடுக்க வேண்டும். காய்ந்த மண் அகல் விளக்குகளை எடுத்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். சந்தனம், குங்குமம் வைப்பதால் விளக்கு மங்களகரமாக இருக்கும். திரி போடும் இடத்தில் பொட்டு வைக்காமல் இடைப்பட்ட இடங்களில் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

நெய் தீபம் :

முடிந்தால் எல்லா தீபங்களுக்கும் நெய் ஊற்ற வேண்டும். அப்படி இல்லையென்றால் காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு போன்ற விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றுதல் நல்லது. மற்ற விளக்குகளுக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

Views: - 61

0

0