தினம் ஒரு திருக்கோவில் – பாகம் 25 : தந்தைக்கு மந்திரம் தந்த சுவாமிமலை!!

2 August 2020, 5:00 am
Quick Share

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது வீடாக காட்சி தருவது சுவாமிமலை. முருகன் திருக்கோவிலுக்கு மலையடிவாரத்திலிருந்து 60 படிகள் ஏறினால் முருகன் சுவாமிநாதனாக காட்சி தருகிறார். சபரிமலையில் பதினெட்டு படிகள் எப்படி புனிதமானதாக கருதப்படுகிறதோ, அதுபோலவே இங்குள்ள 60 படிகளும் புனிதமாக கருதப்படுகின்றன.

தமிழ் வருடங்களின் தேவதைகள் அவரை வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மன் ஆணவத்தில் அலைந்தபோது அவரைக் கண்ட முருகன் பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். விளக்கம் சொல்ல முடியாத பிரம்மனின் தலையில் கொட்டினான் முருகர். பின் பிரமனை சிறையில் அடைத்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சிவபெருமான் பிரமனை விடுவிக்க வேண்டினார். விடுவித்தார் முருகன். அப்போது உரையாடலின் ஒரு பகுதியாக பிரணவ மந்திரம் என்றால் என்ன என்று உனக்கு தெரியுமா என்று கேட்டார் சிவபெருமான். என்னை குருமுகமாக ஏற்றுக்கொண்டால் சொல்வேன் என்று முருகன் பதிலளிக்க, சிவனே அவ்வாறு முருகனை குருவாக ஏற்றுக்கொள்ள, குரு ஸ்தானத்தில் இருந்து முருகன் பிரணவ மந்திரத்தை அருளிய தலம் இது.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோவில் உள்ளது. சோழநாடு சிவன் தலமாக வணங்கப்பட்டபோது, திருவளஞ்சுளி விநாயகர் சந்நிதியும் சுவாமிமலை முருகன் சன்னதியும் வணங்கப்பட்டன. நான்கரை அடி உயர மூலவர் சிலை இங்கு உள்ளது.


மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக இந்திரன் வழங்கிய ஐராவதம் உள்ளது. நெல்லி மரம் கோவிலின் ஸ்தல விருட்சம்.நெல்லிக்கு தாத்திரி என்கிற வடமொழி பெயர் உண்டு. அதனால்தான் தாத்ரகிரி என்றும் இந்த மலையை அழைப்பார்கள்.

இந்தக் கோவில் முருகனை ஞானஸ்கந்தன் என்றும் வடமொழியில் அழைப்பார்கள். வலது கரத்தில் தண்டாயுதம் தாங்கி, இடது கரத்தை இடுப்பில் வைத்து, மார்பில் பூணூலும் ருத்ராட்சமும் விளங்கி கருணா மூர்த்தியாக காட்சி தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் விளங்க பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த மலைக்கு சிவகிரி, குரு வெற்பு, குருமலை ,சுவாமி சைலம் போன்ற பெயர்கள் உண்டு.

சுவாமிமலை ஒரு இயற்கை மலை அல்ல. கற்களால் கட்டப்பட்ட ஒரு மாடக்கோயில். மலைகளே இல்லாத தஞ்சாவூரில் ஆயிரக்கணக்கான கருங்கற்களைக் கொண்டு இந்த கோயில் எழுப்பப்பட்டு இருப்பது மிகப்பெரிய அதிசயம். மூன்றாவது பிரகாரம்மலையடிவாரத்திலும் இரண்டாவது பிரகாரம் மலையின் நடுப்பகுதியிலும் முதல் பாகத்தின் கட்டுமான உச்சியில் சுவாமிநாதசுவாமியை சுற்றிலும் கட்டப்பட்டுள்ளது.

தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைய வேண்டும். நுழைந்தவுடன் வல்லப கணபதி காட்சி தருகிறார். மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், சோமாஸ்கந்தர், விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர் .

மேல்தளத்தில் கண் காத்த கணபதி இருக்கிறார். இன்றும் இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண்பார்வையை அருள்கிறார். இந்த தளத்திற்கு திருவேரகம் என்ற புராண பெயர் உண்டு. தினசரி காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். வஜ்ர தீர்த்தம், குமாரதாரை ,சரவண தீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

விபூதி அபிஷேகத்தில் அருளில் பழுத்த ஞானி ஆகவும் சந்தன அபிஷேகத்தில் பாலசுப்பிரமணியனா கவும் காட்சி தருகிறார். இங்கு திருக்கார்த்திகை பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருமண பாக்கியம், குழந்தை வரம், குடும்ப ஒற்றுமை ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள். நோய்கள் நீங்கவும் பிணிகள் அகலவும் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

இங்கு நேர்த்திக்கடனாக மொட்டை போடுவது, சந்தன காப்பு அபிஷேகம், காவடி எடுப்பது போன்ற வழிபாடுகளைச் செய்கிறார்கள். சத்ரு தொல்லை நீங்கவும் அபிஷேகம் செய்கிறார்கள். வாருங்கள். சுவாமிமலை முருகனை தரிசித்து வாழ்வின் வளமான பலன்களை பெறுவோம்.

Views: - 12

0

0