பஞ்சாப் அணியை துவம்சம் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ்: 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

Author: Rajesh
20 April 2022, 10:41 pm

மும்பை: பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அகர்வால் 24 ரன்களிலும் தவான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோவ் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் அக்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறியது.

அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜிதேஷ் சர்மா 32 ரன்களில் அக்சர் பந்துவீச்சில் எல்பிடபியூ ஆனார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட பஞ்சாப் அணி 20வது ஓவரின் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமத் , லலித் யாதவ் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. எளிய இலக்கு என்பதால் முதல் பந்தில் இருந்தே அதிரடியை துவங்கினர் ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் ஜோடி. சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய இருவரும் பவர்பிளே முடிவில் (6 ஓவர்கள் ) 81 ரன்கள் குவித்தனர்.

சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் டெல்லி அணி 10.3 ஓவர்களில் 119 ரன்கள் அடித்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!