முதல் டி20 போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..

Author: kavin kumar
16 February 2022, 11:12 pm
Quick Share

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் ஓவரிலேயே புவனேஷ் குமார், வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் பிரண்டன் கிங்கை 4 ரன்களில் வெளியேற்றினார். இதையடுத்து, கைல் மேயர்ஸுடன் ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரான் அதிரடி காட்டினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கைல் மேயர்ஸ் 31 ரன்களில் சஹால் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி சிறிது தடுமாற்றம் கண்டது.

எனினும், நிகோலஸ் பூரன் (61 ரன்கள்) களத்தில் நின்றதால் வெஸ்ட் இண்டீஸ் அணி சவாலான இலக்கை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 157- ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்தது. இதன் மூலம் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயித்தது. பந்து வீச்சை பொருத்தவரை இந்திய அணியில் ரவி பிஷோனி, ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார், தீபக் சகார், சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணி பேட்டிங் செய்தது.அதன்படி தொடக்க ஆட்டக்காரர் ரோகித சர்மா அதிரடியாக ஆடி ரன் வேகத்தை உயர்த்தினார். அவர் 3 சிக்சர் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் (19 பந்து) எடுத்திருந்த நிலையில் ரோஸ்டன் சேஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

12 ஓவரில் அணியின் ஸ்கோர் 93 ரன்களாக இருந்த போது இஷான் கிஷன் 35 ரன்(42 பந்து) ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கோலி 17 ரன் (13 பந்து) ஆட்டமிழந்தார். முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மோசமான பேட்டிங் பார்ம் இந்த முறையும் தொடர்ந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்க போராடினர். பண்ட் 8 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக விளையடினார்.

சூர்யகுமார் யாதவ் 1 சிக்சர் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள்(18 பந்து) எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேஸ் 2 விக்கெட், ஆலன் மற்றும் காட்ரெல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

Views: - 1412

0

0