அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் பாகிஸ்தான்? ஒரு பக்கம் விடாத மழை.. மறுபக்கம் ரன் மழை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 நவம்பர் 2022, 6:41 மணி
Pak Won - Updatenews360
Quick Share

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாபர் 6 ரன்னிலும், ரிஸ்வான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த முகமது ஹாரிஸ் 28 ரன்களுக்கு அவுட்டானார்.

அந்த அணி ரன்கள் குவிக்க தடுமாறி வந்த நிலையில் இப்திகார்- ஷதாப் கான் ஜோடி சரிவில் இருந்து மீட்டது. இப்திகார் அரைசதம் கடந்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் அதிரடி காட்டிய ஷதாப் கான் 20 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அவர் 22 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோர்க்கியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டி காக் டக் அவுட்டாகி தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து வந்த ரூசோவ் 7 ரன்களில் ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அப்போது அந்த அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் மார்க்ரம் – பவுமா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.

ஆனால் இந்த ஜோடியை ஷதாப் கான் பிரித்தார். பவுமா 36 ரன்களிலும், அவரை தொடர்ந்து மார்க்ரம் 20 ரன்களிலும் ஷதாப் கானின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்கா 9 ஓவர்களில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடி வந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. க்ளாஸென் மற்றும் ஸ்டப்ஸ் களத்தில் இருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் மழை நின்றது.

இருப்பினும் போட்டி நேரம் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி மழைக்கு பிறகு போட்டி தொடங்கிய போது தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 30 பந்துகளில் 73 ரன்கள் தேவைப்பட்டது. க்ளாஸென் 9 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.

பதற்றமான சூழ்நிலை என்பதால் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தார். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதனால் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழக்கும் நிலை இருந்தது.

ஆனால் வெற்றி பெற்றுள்ளதால் பாகிஸ்தான் அரையிறுதி ரேசில் நீடிக்கிறது. தற்போது அந்த அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் உள்ளது.

  • Ar Diary லட்டு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் செய்த ஏஆர் டெய்ரி நிறுவனம்? என்ட்ரி கொடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!
  • Views: - 540

    1

    1