குத்துச்சண்டை பயிற்சியில் வெளுத்து வாங்கிய அமைச்சர்!

Author: Thandora
7 January 2021, 4:55 pm
Quick Share

சென்னை மின்ட் ரயில்வே காலணி வளாகம் களைகட்டி இருந்தது. உலக குத்துச்சண்டை தினத்தையொட்டி 19 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான குத்துச்சண்டை போட்டி துவங்குவதற்காக கூட்டம் கூடி இருந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

இளைஞர்கள் அனைவரும் போட்டியில் மோதுவதற்கு தயாராக இருந்தபோது என்னோடு மோதத் தயாரா என்று கேட்டார் அமைச்சர் ஜெயக்குமார். வாருங்கள் தாராளமாக ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று இளைஞர் ஒருவர் கூப்பிட்டார். வயதானவர் தானே இவரை நாம் எளிதாக ஜெயித்து விடலாம்; இவருக்கு பாக்சிங் எங்கே தெரியப் போகிறது என்ற எண்ணத்தில் இளைஞன் களத்தில் குதித்தார்.

அமைச்சரும் உடனே தயாராகி இளைஞனுக்கும், அமைச்சர் ஜெயக்குமாருக்கும் மோதல் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சற்று சிரமப்பட்ட அமைச்சர், திடீரென தன் அதிரடி ஆட்டத்தை காட்டத் துவங்கினார். இளைஞனின் முகத்திலும், மார்பிலும், வயிற்றிலும் சராமரியாக கும்மாங்குத்து விடத் துவங்கிய போது இளைஞனால் எதிர்கொள்ள முடியவில்லை.

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்; கடைசியில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இளைஞர் தோற்றுப்போனார். அங்கிருந்தவர்கள் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்து அமைச்சரை பாராட்டினர். இத்தனை வயதிலும் எப்படி உங்களால் இவ்வளவு ஈடுகொடுக்க முடிகிறது என்று கேட்டனர்.

“சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் கிரிக்கெட், புட்பால், பாக்சிங், சிலம்பம், வாள் சுற்றுதல், ஓட்டப்பந்தயம் என அனைத்து விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வத்தோடு இருந்ததால்தான் இன்னமும் இவ்வளவு வேகமாகவும் எளிதாகவும் எதையும் எதிர்கொள்ள முடிகிறது” என்று சொன்னார் அமைச்சர்.

எனவே, உங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி தர வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஏனென்றால் விளையாட்டு என்பது உடலுக்கும், மனதிற்கும், வாழ்விற்கும் மிகமிக அவசியமானது என்று அவர் சொன்னபோது அங்கிருந்தவர்கள் அனைவரும் அதனை ஆமோதித்தனர்.

Views: - 53

0

0