கழிவறையை சுத்தம் செய்த பள்ளி மாணவி… வீடியோ வைரலானதால் சர்ச்சை… தலைமையாசிரியர் அதிரடியாக பணியிட மாற்றம்!!

Author: Babu Lakshmanan
30 March 2022, 10:54 am

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே அரசுப்பள்ளியில் பயின்று வரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த ஆனம்பாக்கம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. 10-ஆம் வகுப்பு வரை செயல்படும் இந்த உயர்நிலைப்பள்ளியில் 267 மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

ஆனம்பாக்கம் ஊராட்சியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் இங்கு உள்ள துவக்கப்பள்ளியிலும், நடுநிலைப்பள்ளியிலும் உயர்நிலைப் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.

இதனிடையே, பட்டியலின மாணவி ஒருவர் பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை கண்ட சமூக ஆர்வலர்கள் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதும் ஊராட்சி மன்ற தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதன்படி நேற்று சம்பந்தப்பட்ட பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி நடராஜன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மாணவியிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்தனர்.

இதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பாவதி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டார். அதன்பேரில், பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பாவதியை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி நடவடிக்கை மேற்கொண்டார்.

  • vijay does not come out after 6 o clock said by suriya siva 6 மணிக்கு மேல விஜய் வெளில வரமாட்டார்; இதுதான் ரகசியம்- வம்பிழுத்த அரசியல் பிரபலம்