புதுக்கோட்டை தேர் விபத்தில் ஒரு வாரத்திற்கு பின் உயிரிழப்பு : சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2022, 12:26 pm

புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடவரை கோவில்களில் ஒன்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேசுவரர் கோவில் ஆகும்.

தொண்டைமான் மன்னர் காலத்தில் அவர்களது குல தெய்வமாக இக்கோவில் விளங்கியது. இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது.

தொடர்ந்து தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத்தையொட்டி தேரோட்டம் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது.

அப்போது தேர் நிலையில் இருந்து புறப்பட்ட உடனே சிறிது நேரத்தில் முன்பக்கமாக தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தேர் விபத்தில் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரிமலம் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி(வயது 59) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

தேர் விபத்தில் சிக்கி ஒரு வாரத்திற்கு பிறகு ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • the reason behind lal salaam movie flop was rajinikanth sir extended cameo said by vishnu vishal ரஜினிகாந்த் ரசிகர்களை சீண்டிப்பார்த்த விஷ்ணு விஷால்! களேபரமான சமூக வலைத்தளம்?