மீனவர்களை கதறவிட்ட மார்க்கெட் நிர்வாகம்: கடை ஒதுக்க ரூ.1.5 லட்சம் கேட்டு ‘கெடுபிடி’…!!

Author: Aarthi Sivakumar
20 September 2021, 2:10 pm
Quick Share

கோவை: கோவையில் உள்ள மீனவர்களுக்கு மீன் மார்க்கெட்டில் கடை ஒதுக்க லட்சக்கணக்கில் பணம் கேட்பதாக கூறி மீனவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கோயம்புத்தூர் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பாலமுருகன் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க 11 குளங்களை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.

நாங்கள் பரம்பரை பரம்பரையாக மீன் பிடிக்கிறோம். உக்கடம் பழைய மீன் மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட், புல்லுக்காடு பகுதியில் புதிதாக அமைய உள்ள மீன் மார்க்கெட் ஆகியவற்றில் எங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், புல்லுக்காடு மார்க்கெட்டில் இடம் கொடுக்க மார்க்கெட் நிர்வாகிகள் ரூ. 1.5 லட்சம் கேட்கின்றனர். அதோடு, மீன் வெட்ட இடம் ஒதுக்க ரூ.1.5 லட்சம் கேட்கின்றனர்.

தரையில் அமர்ந்து மீன் விற்பனை செய்யும் எங்களுக்கு இவ்வளவு பணம் செலுத்த முடியாது. கோவையில் 750 மீனவர்கள் உள்ளனர். நாங்கள் மீன் பிடித்து வியாபாரிகளிடம் கொடுத்தால் ரூ.200 முதல் ரூ. 400 தான் கிடைக்கும். நாங்களே வியாபாரம் செய்தால் தான் லாபம் கிடைக்கும்.

அவ்வாறு மீன் கடை அமைக்க சென்றால் மார்க்கெட் நிர்வாகிகள் எங்களை மிரட்டுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு உரிய தீர்வை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

Views: - 207

0

0