காஞ்சிபுரத்தில் 1200 ஆண்டுகள் பழமையான சிலை கண்டெடுப்பு: பத்திரமாக மீட்ட பொதுமக்கள்..!!

Author: Rajesh
20 March 2022, 3:35 pm
Quick Share

காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் ஊராட்சியில் பிடாரி கோயில் செல்லும் வழியில் புதைந்த நிலையில் இருந்த ஒரு சிலையை ஊர் பொதுமக்கள் தோண்டி எடுத்து சுத்தம் செய்து வைத்திருந்தனர். ஆர்ப்பாக்கம் கிராமம் என்பது சைவம் வைணவம் பௌத்தம் சமணம் ஆகிய சமயங்கள் செழிப்புடன் வளர்ந்திருந்த ஊராகும் அந்த ஊரின் பழைமையை  பறைசாற்றும் வகையில் இந்த சிற்பம் அமைந்துள்ளது ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர்.

அந்த சிலையை ஆய்வுசெய்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் அவர்கள் கூறும்போது, இந்த சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை எனவும் இது சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் தெரிவித்தார்.

தொண்டை மண்டலமாக இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமான மூத்த தேவி சிலைகள் உள்ளன என்றும் அதிலும் குறிப்பாக இந்த சிலையில் மூத்த தேவியுனுடைய மகனும் மகளும் பெரிய உருவமாக அவருக்கு இணையாக காட்டப்பட்டிருப்பது சிறப்பானதாகும் என்றும் கூறினார்.

மேலும் மூத்த தேவியுனிடைய இடது கரம் தன்னுடைய மகள் மாந்தியின் இடையை அணைத்தவாறு  உள்ளது கூடுதல் சிறப்பாகும் என்றார். காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக விளங்கியது. எனவே  மாவட்டம் முழுவதும் பல்லவர்களின் வரலாற்று சின்னங்கள் பல இடங்களில் காணப்படுகிறது.

வயல்வெளியிலும், புதர்களிலும் இதுபோன்ற வரலாற்றுச்சின்னங்கள் புதைந்திருப்பதை மீட்டெடுத்து  பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 586

0

0