கோவை மாவட்டத்தில் 2,064 பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற எம்.எல்.ஏ உதயநிதி !!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2021, 1:41 pm
Udhayanithi Stalin Sweet -Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மொத்தம் 2 ஆயிரத்து 64 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, 586 நாட்களுக்கு பின் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் துவங்கியது.
அதன்படி, மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகள் என மொத்தம் 1,208 பள்ளிகள் உள்ளன. இதில், 780 பிரைமரி பள்ளிகளில் 51 ஆயிரத்து 856 பேர், 232 நடுநிலைப்பள்ளியில் 39 ஆயிரத்து 961 மாணவர்கள், 113 மேல்நிலைப் பள்ளியில் 75,461 மாணவர்கள் மற்றும் 83 உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 17,127 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 805 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்கள், தவிர 178 அரசு உதவிப்பெறும் பள்ளிகள், 3 ஒன்றிய அரசின் மேல்நிலைப்பள்ளிகள், 675 தனியார் பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,064 பள்ளிகள் உள்ளன. இதில், 5 லட்சத்து 70 ஆயிரத்து 508 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஏற்கனவே, 9-ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து நடந்து வரும் நிலையில், இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாணவர்கள் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பின் வகுப்பறையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஆனைமலை ஒன்றியம் பெத்தாநாய்க்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர்.

பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு இருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். இதேபோல், கோவை சித்தாபுதூர் பகுதி உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், மலர்களை வழங்கியும் வரவேற்றார்.

முதல் நாள் என்பதாலும், காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்ததாலும் பள்ளிகளுக்கு மிக குறைவான மாணவர்களே வந்தனர். இவர்கள், வகுப்பறையில் சமூக இடைவெளி கடைப்பிடித்து அமர வைக்கப்பட்டனர்.

மேலும், மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு அடுத்த 15 நாட்களுக்கு அவர்களுக்கு பள்ளியில் பாடங்களுக்கு பதிலாக, மாணவர்களுக்கு குதூகலம் அளிக்கும் வகையில் வாய்மொழி பயிற்சி, கதைகள் கூறுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Views: - 212

0

0