22 வயதில் கவுன்சிலர் வேட்பாளரான சட்டக்கல்லூரி மாணவி: முன்னாள் அதிமுக மேயர் மகளை களமிறக்கிய காங்கிரஸ்…!!

Author: Rajesh
1 February 2022, 4:00 pm
Quick Share

திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டில் தீபிகா என்ற 22 வயது சட்டக்கல்லூரி மாணவி போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 55 வது வார்டில் தீபிகா அப்புக்குட்டி என்ற பெண் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 22 வயது இளம்பெண் தீபிகா அப்புகுட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

தீபிகா அப்புக்குட்டி திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் மேயராக பதவி வகித்த விசாலாட்சியின் மகள் ஆவார். அதிமுக சார்பில் மேயராக பதவி வகித்த விசாலாட்சி, சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் தெற்கு தொகுயில் விசாலாட்சி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போதும் விசாலாட்சி அமமுகவில் தான் உள்ளார். தாய் அமமுகவில் இருக்கும் நிலையில், அவரின் மகள் தீபிகா அப்புகுட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 22 வயது ஆன தீபிகா அப்புகுட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இது குறித்து தீபிகா கூறுகையில், சிறு வயது முதலே இந்திரா காந்தி குறித்து புத்தகங்களில் படித்தேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். இதனால் அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதனைத்தொடர்ந்து 2020ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதால் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார்.

Views: - 946

0

0