பழங்குடி மக்கள் வசிக்க எதிர்ப்பு… கிராமத்தினர் துரத்தியதால் குழந்தைகளுடன் வெளியேறிய 27 பேர் : அரணாக நின்ற தாசில்தார்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2022, 10:18 pm
Villupuram - Updatenews360
Quick Share

விழுப்புரம் : சின்ன செவலை கிராமத்தில் பழங்குடி ஆதி மக்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் தஞ்சமடைந்துள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள சின்ன செவலை கிராமத்தில் பழங்குடி ஆதி மக்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 நபர்கள் கோவில் பள்ளிக்கூடம் எதிரில் சமைத்து சாப்பிட்டு உறங்குவதும் என வாழ்ந்து வந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதன் பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடும்ப அட்டை, பேங்க் புக், ஆதார்கார்டு ஓய்வுதியம் வழங்கப்பட்டது.

வருவாய் துறை சார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கே தங்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வெளியேற கூறியதால் அங்கிருந்து திருவெண்ணெய்நல்லூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள புளிய மரத்தில் தஞ்சமடைந்தனர்.

மேலும் பள்ளியில் படித்துவந்த சிறுமியை சக மாணவர்கள் வெளியேற்றியது கண்ணீர் மல்க அழுதுகொண்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதனை அடுத்து திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சின்னசெவலை கிராமத்தில் பல வருடங்களாக தங்கி இருப்பதாகவும் நாங்கள் தங்குவதற்கும் எங்களின் குழந்தைகள் பள்ளியில் படிப்பதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இங்கு வந்து விட்டோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டாவும் வீடும் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

விரைவில் பட்டா வழங்குவதாகவும் அதுவரைக்கும் ஆலங்குப்பம் பகுதியில் தங்குமாறும் தாசில்தார் கூறினார். அதன் பிறகு அவர்கள் ஒப்புக்கொண்டனர். திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

Views: - 344

0

0