நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்… விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2024, 4:26 pm

கருணாஸ் நடிகர் மட்டுமில்லை, அவர் இசையமைப்பாளர், பாடகர், அரசியல் பிரமுகர் என பன்முகத் திறமைகளை கொண்டுள்ளார். இவருடைய சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை எனும் கிராமம்தான். ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கிய அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை எனும் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் இவர் 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

இவர் நாட்டுப்புற பாடகராக பணிபுரிய தொடங்கியதால் இவருக்கு கானா கருணாஸ் என்ற பெயரும் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின் போது அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூரில் பத்திரப்படுத்தியதற்கு கருணாஸும் ஒரு காரணமாக இருந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார். இவர் திருச்சி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கு அவரை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர் .

அப்போது அவரிடம் 40 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது தான் பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அதற்கு லைசன்ஸ் இருப்பதாகவும் தெரிவித்தார். எனினும் விமானத்தில் துப்பாக்கி, தோட்டாக்களுடன் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு முன் அனுமதி தேவைப்படுகிறது.

அதை கருணாஸ் பெறவில்லை என்பதால் அவரை திருச்சி விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவருடைய பயணம் திடீரென ரத்தானது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து அவர் வீட்டுக்குச் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!