தரமற்ற உணவுகள் கூடுதல் விலைக்கு விற்ற விவகாரம் : மேலும் 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை..!

Author: kavin kumar
26 January 2022, 4:41 pm
Quick Share

சென்னை : தரமற்ற உணவுகளை கூடுதல் விலைக்கு விற்றதால் விக்கிரவாண்டி அருகே 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணவழி உணவகங்களான மோட்டல் என்றழைக்கப்படும் உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக பயணிகள் தரப்பில் இருந்து அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது வழக்கம். அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் ஒரு ஹோட்டலில் உணவுப் பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாகவும், அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் பொதுமக்கள், பயணிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாமண்டூர் ஹோட்டலில் அரசு பேருந்துகள் நிற்க தடை விதித்திருந்தார்.

அதேபோல் தரமான உணவுகளை வழங்கும் புதிய ஹோட்டல்களை அமைக்க தீவிரம் காட்டி வருவதாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குழு, போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிற்கும் நெடுஞ்சாலை தனியார் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் விக்ரவாண்டி அருகே செயல்பட்டு வரும் அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்றது ஆய்வின் போது கண்டறியப்பட்டது. மேற்கண்ட உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட உணவகங்களின் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்துவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1533

0

0