குமரி மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை ராட்சத உடும்பு சுறா : ரூ.1 லட்ச ரூபாய்க்கு விற்பனையானதால் மகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2022, 4:07 pm
Rare Fish - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குளச்சலில் மீனவர் வலையீல் சிக்கிய 2-டன் எடை உள்ள 10- அடி நீளம் கொண்ட அரிய வகை “உடும்பு சுறா” மீனை பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்பி போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சார்ந்தவர் மெல்பின். இவர் தனது பைபர் படகில் சக மீனவர்கள் 3-பேருடன் இன்று காலை குளச்சல் கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்து கொண்டிருந்தார்.

அப்போது நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த வேலையில் அந்த பகுதியில் வந்த ராட்சத சுறா மீன் அவர்களின் பைபர் படகை மோதி தாக்கியது. இதனால் மீனவர்கள் நிலை தடுமாறிய நிலையில் அந்த சுறா மீன் தொழிலுக்காக மீனவர்கள் விரித்திருந்த வலைக்குள் தானாகவே சிக்கி கொண்டது.

இந்த மீன் ராட்சத சுறா என்பதால் பைபர் படகு மூலம் ஏற்றி கரைக்கு கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மீனவர்கள் தங்கள் வலையில் சிக்கிய சுறா மீனை வலையோடு இழுத்தபடியே பைபர் படகை ஓட்டி கொண்டு குளச்சல் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

பின்னர் கரைக்கு வந்த மீனவர்கள் விசைப்படகில் பயன்படுத்தப்படும் கிரேன் மூலம் கரைப் பகுதிக்கு ராட்சத சுறா மீனை கொண்டு வந்தனர். குளச்சல் துறைமுகத்தில் கொண்டு வரப்பட்ட சுறா மீன் 10-அடி நீளமும் 2-டன் எடையும் கொண்ட அரிய வகை “உடும்பு சுறா” என்பது தெரியவந்தது.

இந்த சுறா மீனை குளச்சல் துறைமுகத்தில் கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர். பின்னர் சிறுவர்கள் அதன் மீது ஏறி அமர்ந்து விளையாடியும் மற்றும் செல்பி போட்டோக்களும் எடுத்து கொண்டனர்.

இந்த நிலையில் பைபர் படகில் தினந்தோறும் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஒரு நாள் சுமார் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருவது இயல்பானது. ஆனால் இன்று அந்த பைபர் படகில் சிக்கிய ஒரு சுறாவின் மதிப்பு 1 லட்சம் ரூபாய்க்கு விலை போனதால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Views: - 1847

0

0