6 வயது சிறுவனை கடித்து குதறி தரதரவென இழுத்து சென்ற தெருநாய்கள் : பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 1:38 pm
Street Dogs Bite -Updatenews360
Quick Share

திருப்பூர் : 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்களால் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாய்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் – தாராபுரம் சாலை, தெற்குதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. பஞ்சு விற்பனை செய்யும் இடைத்தரகராக உள்ளார். இவரது ஆறு வயது மகன் பிரகதீஸ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பிரகதீஸ் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிரகதீசை கடித்து குதறியவாறே தூக்கி சென்றது.

இதனை கண்ட அருகிலிருந்தவர்கள், தெரு நாய்களை துரத்தியடித்து சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு பிரகதீஸ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளதால் தெருவில் விளையாடும் சிறுவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் துரத்தி சென்று கடிக்கின்றன.

இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்னர்.

இந்த நிலையில் சிறுவனை தெருநாய்கள் கடித்து குதறிய காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி தற்போது அது வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 629

0

0