76 வயதில் தந்தையின் பாசம்… கரும்பை தலையில் வைத்து 14 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம்.. மகளுக்கு பொங்கல்சீர் எடுத்துச் சென்று ஆச்சர்யம்!!

Author: Babu Lakshmanan
14 January 2023, 7:40 pm
Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே 76 வயது முதியவர் ஒருவர் மிதிவண்டியில் பொங்கல் சீரை எடுத்துக்கொண்டு 14 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மகளின் வீட்டில் சீர்வரிசை கொடுத்த நிகழ்வு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே உள்ள கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை.இவரது மகள் சுந்தரம்பாளை ஆலங்குடி அருகே உள்ள நம்பம்பட்டியை சேர்ந்த பழனி என்பவருக்கு கடந்த 18 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

அந்த தம்பதியினருக்கு 10 ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

தனது மகளுக்கு நீண்ட காலம் குழந்தை இல்லாமல் அதன் பின்பு இரட்டைக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் செல்லத்துரை கடந்த ஏழு ஆண்டுகளாக கொத்தகோட்டை கிராமத்திலிருந்து வம்பன் கிராமத்தில் உள்ள கடைவீதிக்கு வந்து, அங்கு கரும்பு கட்டு, மஞ்சள் கொத்து, தேங்காய் பூ, பழம், பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் சீர்வரிசை பொருட்களை வாங்கிக்கொண்டு, கரும்பு கட்டை மட்டும் தலையில் வைத்துக் கொண்டு மற்ற பொருட்களை சைக்கிளில் தொங்கவிட்டபடி, 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நம்பம்பட்டி கிராமத்திற்கு சென்று தனது மகளுக்கு சீர்வரிசை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதில் வியக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுவது அவரது தலையில் இருக்கும் கரும்பு கட்டை அவர் கையால் பிடிக்காமலேயே 14 கிலோ மீட்டர் தூரமும் சைக்கிளை ஓட்டி செல்வதுதான்.

இந்த ஆண்டும் தனது மகள் சுந்தராம்பாளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக, வம்பன் கிராமத்திலிருந்து 14 கிலோமீட்டர் தூரம் கரும்பு கட்டை தலையில் பிடிக்காமல் சுமந்தவாறு மிதிவண்டியை ஓட்டி சென்ற செல்ல துறையின் செயல் அவ்வழியே சென்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதுகுறித்து முதியவர் செல்லத்துரை கூறுகையில்:தனது மகள் சுந்தரபாளுக்கு பத்தாண்டுகளுக்கு மேல் குழந்தை இல்லாததால் மன வேதனையில் இருந்ததாகவும், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுக்கு இரட்டை குழந்தை பிறந்ததால், அதன் அடுத்த ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் மகிழ்ச்சியின் காரணமாக மிதிவண்டியில் கரும்பு கட்டை தலையில் சுமந்தவாறு பொங்கல் சீர் வரிசை பொருட்களை கொண்டு வந்து கொடுத்து வருவதாகவும், இந்த வயதிலும் தனது உடல் ஆரோக்கியமாக இருப்பதால் மிதிவண்டியில் வருவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவரது மகள் மருமகன்கள் கூறுகையில்:- ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தனது தந்தை பொங்கல் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும், தங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்த மகிழ்ச்சியில், தந்தை அதன் பின்பு சைக்கிளில் தலையில் கரும்பு கட்டை பிடிக்காமல் சுமந்தவாறு 14 கிலோமீட்டர் தூரம் வந்து, கரும்பு, மஞ்சள் கொத்து, வெள்ளம், பச்சரிசி, சீனி, பூக்கள், பழம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கொடுத்து வருவதாகவும், இது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Views: - 631

0

0