பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.. நடு ஆற்றில் பரிதவித்த 9 இளைஞர்கள் கூச்சல் : விரைந்த தீயணைப்பு வீரர்கள்!!

18 July 2021, 7:52 pm
Bhavani River - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் பவானியாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 இளைஞர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கோவை மாவட்ட மக்களின் குடிநீராதாரமாக பவானி ஆறு இருந்து வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள ஜோதிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ராஜ், ரஞ்சித், கர்ணன், ஹரிஹரன் உள்ளிட்ட 9 இளைஞர்கள் இன்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை மற்றும் குண்டுக்கல் துறை பகுதிகளில் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பவானியாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் ஆற்றின் நடுவே இருந்த திட்டில் ஏறி நின்று தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர். இதனை கண்டு ஆற்றின் கரையோரப்பகுதிகளில் நின்றிருந்த பொதுமக்கள் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் நடுவே சிக்கிக்கொண்டிருந்த 9 இளைஞர்களையும் பரிசல் மூலம் பத்திரமாக மீட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

பவானியாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் நடுவே சிக்கிக்கொண்ட 9 இளைஞர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 157

0

0