சாலை வசதியில்லை… பிரசவத்திற்காக மூங்கில் தொட்டிலில் தூக்கி செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் ; கடவுளின் தேசத்தில் நிகழ்ந்த அவலம்

Author: Babu Lakshmanan
13 December 2022, 6:42 pm
Quick Share

கோவை ; முறையான சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக நிறை மாத கர்ப்பிணி பெண்ணை மூங்கில் தொட்டிலில் கட்டி 3.5 கிலோ மீட்டர் உறவினர்கள் தூக்கி வந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி அருகே உள்ள கடுகுமன்னா பகுதியில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பவானி ஆற்றின் மறு கரையில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு செல்ல சரியான சாலை வசதி மற்றும் உயர் மட்ட பாலம் இல்லாததால் பவானி ஆற்றை கடக்க இப்பகுதிமக்கள் தொங்கு பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தொங்கு பாலத்தை கடந்தாலும் சாலை வசதியில்லாததால் மூன்றரை கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக நடந்து சென்றால் மட்டுமே, மற்ற பகுதிக்கு செல்ல முடியும். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அக்கிராமத்தில் உள்ள முருகன் என்பவரின் மனைவி சுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவரது கணவர் முருகன் இது குறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் சாலை வசதியில்லாததாலும்,யானை நடமாட்டம் இருந்ததாலும் ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு வரமுடியாததால் அருகில் உள்ள ஆனவாய் வரை மட்டுமே ஆம்புலன்ஸ் வர முடியும் என தெரிவித்துள்ளனர்.

பின்னர், முருகனின் உறவினர்கள் மூங்கிலில் போர்வையை கொண்டு தொட்டில் கட்டி அதில் கர்ப்பிணி சுமதியை படுக்க வைத்து மூன்றரை கிலோமீட்டர் தூக்கி கொண்டு ஆனவாய் பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் கோட்டத்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுமதிக்கு சுகப்பிரசவத்தின் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

தற்பொழுது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். கடவுள் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் சாலை வசதி இல்லாத நிறைமாத கர்ப்பிணி பெண்ணை மூங்கில் தொட்டில் கட்டி தூக்கி வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 325

0

0