கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு… சிறை செல்லும் மன்சூர் அலிகான் : முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!!

21 April 2021, 5:40 pm
mansoor alikhan - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நெஞ்சுவலி காரணமாக வடபழனி மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் உடல் நலம் விசாரிக்க வந்த நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அரசுக்கும், மருத்துவ அறிவியலுக்கும் எதிராக அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது. பொதுமக்களிடையே கொரோனா பெரும் தொற்று என்று இல்லாத ஒன்றை இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை என்றும் மேலும் இதயத்தில் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவேக் தடுப்பூசி காரணமாக இந்த நிலைமைக்கு சென்றது போன்ற அவதூறு செய்தியை செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல், பேரிடர் மேலாண்மை சட்டம் 153, 270, 505(1), 54 of disaster management act, 3 of Epidemic act, உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்களை தெளிவாக குறிப்பிடவில்லை எனக் கூறி, முன்ஜாமீன் மனுவை நீதிபதி செல்வகுமார் தள்ளுபடி செய்தார். மேலும், புதிய மனுவைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

Views: - 115

0

0