முழுக்க முழுக்க இந்தியில் உரையாற்றிய அமைச்சர் : தூங்கி வழிந்த மாணவிகள்..!

22 January 2021, 4:26 pm
Quick Share

கோவை: கோவையில் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் முழுக்க முழுக்க இந்தியில் பேசினார். இந்தி தெரியாத மாணவிகள் தூங்கி வழிந்தனர்.வை அவினாசி லிங்கம்பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு அனைத்து மாணவிகளும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட வில்லை. மாறாக முனைவர் பட்டம் பெறுவோர் மற்றும் பல்கலைக்கழக அளவில் பதக்கங்களை பெற்ற 166 பேர் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கலந்து கொண்டார். அவருக்கு அவினாசி லிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து பல்கலைக்கழ வேந்தர் எஸ்.பி.தியாகராஜன் மாணவிகள் மத்தியில் உரையாற்றுமாறு மத்திய அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.

விழாவில் அமைச்சர் என்ன பேசப்போகிறார் என்று பேராசிரியர்களும் மாணவிகளும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.ஆனால், தனது உரையை தொடங்கிய மத்திய அமைச்சர் இந்தியிலேயே தனது பேச்சை தொடர்ந்தார்.

அறிமுகத்திற்காக இந்தியில் பேசுவாராக இருக்கும், ஆங்கிலத்தில் தான் உரை இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்க அமைச்சர் தனது உரையையும் இந்தியிலேயே தொடர்ந்தார்.

இதனால் இந்தி மொழி தெரியாத பல மாணவிகள் செய்வதறியாது வெறுமனே அமர்ந்திருந்தனர். உரை 30 நிமிடங்களை கடந்து செல்ல பலர் தூங்கி வழிந்தனர்.இன்னும் சிலர் தலையில் கைவைத்தபடி யோசித்துவிட்டு செல்போன்களை உபயோகிக்க ஆரம்பித்தனர்.

நாட்டின் கல்வி அமைச்சர் பெரும்பான்மையினருக்கு புரியும் வகையில் பேசாமல் இந்தி மொழியிலேயே பேசியது மாணவிகளையும், ஆசிரியர்களையும் சலிப்படைய செய்தது.

Views: - 0

0

0