கொரோனா சிகிச்சை: கோவையில் மேலும் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி

Author: Udayaraman
6 October 2020, 5:43 pm
Corona_Vaccine_China_UpdateNews360
Quick Share

கோவை: கோவையில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா சிகிச்சையளிக்க மேலும் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் தவிர்த்து 26 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்தில் தான் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாகவுள்ளது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீதம் வரை பிற மவட்டங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்போது கோவையில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஏற்ப சிகிச்சை வசதிகளை அதிகரிக்கும் வகையில் மேலும் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சாய்பாபா காலனி கேடிவிஆர் மருத்துவமனை, குனியமுத்தூர் கே.ஜெ. மருத்துவமனை, துடியலூர் உமா நர்ஷிங் ஹோம், அன்னூர் என்.எம். மருத்துவமனை, சின்னியம்பாளையம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை மற்றும் ராமநாதபுரம் லியோ ஆர்தோ கேர் மருத்துவமனை ஆகிய 6 தனியார் மருத்துவமனைகளில் 226 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணா கூறியதாவது: கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு ஏற்றது போல் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 6 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசாணை 240ன் படி அரசு நிரணயித்துள்ள கட்டணங்களை மட்டுமே நோயாளிகளிகளிடம் வாங்கவும், அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 1,305 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 2,362 படுக்கைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 1,539 படுக்கைகள் சேர்த்து 5 ஆயிரத்து 206 படுக்கை வசதிகள் பயன்பாட்டில் உள்ளன.

தவிர அரசு மருத்துவமனைகளில் 1,519 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 2,362 படுக்கைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 5,586 படுக்கைகள் சேர்த்து 9 ஆயிரத்து 467 படுக்கை வசதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

Views: - 48

0

0