மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தான்..! அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Author: Sekar
7 October 2020, 10:05 am
TN_CM_EPS_UpdateNews360
Quick Share

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த பரபரப்பு, தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி வரும் மே 2021’இல் முடிவடைய உள்ள நிலையில், வரும் 2021 ஏப்ரல்-மே காலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் திமுகவைப் பொறுத்தவரை கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் தான் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ.பன்னீர் செல்வமா எனும் பரபரப்பு நீடித்து வந்தது.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக தலைமை தீவிர விவாதம் நடத்தியது. இன்று அதிகாலை வரை நடந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியது பின்வருமாறு :- கட்சிப் பணிகளை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவின் உறுப்பினர்களாக திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், ப.மோகன், கோபால கிருஷ்ணன், மாணிக்கம்  ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர் செல்வம் பேசியது பின்வருமாறு :- வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார். இதன் மூலம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தேர்தல் பணிகளை ஜரூராக ஆரம்பித்து விட்டது.

Views: - 60

0

0