“அதிமுக சிதைந்து போகும் என கற்பனை செய்பவர்கள் ஏமாந்து போவார்கள்“ : அமைச்சர் கடம்பூர் ராஜு

By: Udayachandran
4 October 2020, 11:01 am
Minister Kadamboor Raju - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : அதிமுக பிரிந்து போகும், சிதைந்து போகும் என்று யாரவது கற்பனையாக நினைத்தால் கூட ஏமாந்து போய்விடுவார்கள் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் நடைபெற்ற புரட்டாசி சனி உற்சவ விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்து கொடுத்து பாதையில் கட்டுகோப்புடன் அதிமுக உள்ளது. 2 முறை பிரிந்த கட்சி ஒன்று சேர்ந்து இழந்த சின்னத்தை மீட்ட வரலாறு அதிமுகவிற்கு தான் உண்டு.

அதிமுக பிரிந்து போகும், சிதைந்து போகும், கொடி இருக்காது சின்னம் முடங்கிபோய்விடும் என்று யாரவது கற்பனையாக நினைத்தால் அவர்கள் ஏமாந்து போய்விடுவார்கள். ஒன்றைகோடி தொண்டர்கள் அதிமுகவினை விட்டு எங்கும் செல்லாமல், அதிமுக தொண்டர் என்ற பெருமையே போதும் என்று இருக்கிறார்கள்.

இந்த இயக்கத்தினை கட்டிகாப்பவர்கள் ஒன்றைகோடி தொண்டர்கள். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரிடம் பாடம் பயின்றவர்கள் தான் இ.பி.எஸ், ஒ.பி.எஸ், செயற்குழு கூட்டம் நடந்தால் பல்வேறு விவாதங்கள் நடப்பது இயற்கை, ஜனநாயக ரீதியிலான இயக்கம் என்பதால் விவாதம் இருக்கும்,திமுக போல காணொளி காட்சி மூலமாக செயற்குழு நடத்தி அவர்களாகவே தீர்மானம் நிறைவேற்றும் கட்சி போன்று அதிமுக கிடையாது, ஜனநாயக ரீதியாக 4 மணி நேரம் விவதாம் நடத்தி சரியான முடிவு எட்டப்பட்டு இருக்கிறது.

வரும் 7ந்தேதி செயற்குழுவில் எதை வலியுறுத்தினார்களோ அது தெரிவிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்,முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதலுடன் வரும் தேர்தலை சந்திப்போம், மீண்டும் வெற்றி பெறுவோம், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமைப்போம் என்றும், எம்.எல்.ஏக்கள் கூட்டம் எதுவும் நடைபெறபோவதில்லை, தற்பொழுது தான் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தலைமை கழகத்தினால் எந்த கூட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றார்.

Views: - 33

0

0