கோவையில் அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 199 பேர் மீது வழக்கு : முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டின் முன் கூட்டம் கூடியதாக வழக்குப்பதிவு..!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2021, 8:40 am
கோவை : கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று சோதனை நடந்த போது அதற்கு இடையூறு செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 199 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான மற்றும் அவரது நெருங்கிய நபர்களுக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.
இதில், பலரது வீடுகளிலும் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என்று சான்று அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் எந்த ஆவணங்களும் கைப்பற்றப் படவில்லை என்றும் ஒரே ஒரு பெட்டக சாவி மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடப்பதை அறிந்த கோவை அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர்.
இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சட்டத்திற்கு புறம்பாக கொரோனா தொற்றை பரப்பும் கூடுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார், தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே செல்வராஜ், மகேந்திரன், அமுல் கந்தசாமி, எம்.எஸ்.எம். ஆனந்தன், கந்தசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கஸ்தூரி வாசு, எட்டிமடை சண்முகம் மற்றும் ஓ.கே.சின்னராஜ் உட்பட 187 பேர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி அதிமுக.,வினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
0
0