அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு : சட்டமசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் விஜயபாஸ்கர்..!

15 September 2020, 9:15 am
Quick Share

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தாக்கல் செய்கிறார்.

கொரோனா பேரிடருக்கு இடையே தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று கூடியது. மூன்று நாச்கள் பேரவை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார். இந்த நிலையில் முதல் நாளான நேற்று 16 நிமிடங்கள் மட்டுமே கூட்டம் நடைபெற்றது.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்.பி வசந்த குமார் மற்றும் மறைந்த எம்எல்ஏக்கள் 23 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று 2வது நாள் சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

குறிப்பாக திமுக சார்பில், இன்றும், நாளையும் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதிப்பதற்காக தனி தீர்மானம் ஒன்றும், 31 கவன ஈர்ப்பு தீர்மானங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளார்.

அதேபோன்று, கொரோனா முறைகேடு, நீட் தற்கொலை, பிரதமரின் கிசான் மற்றும் வீடு கட்டும் திட்ட ஊழல் உள்ளிட்ட பல முக்கிய பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் பல்வேறு உறுப்பினர்கள் சபாநாயகருக்கு நேற்று கடிதம் கொடுத்துள்ளனர். இதனால், இன்றைய கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தாக்கல் செய்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு `நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், இதுபற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.