மேட்ரிமோனி மூலம் மேட்ச் செய்த மாப்பிள்ளைக்கு அல்வா.. விரித்த வலையில் வசமாக மாட்டிய மோசடி பெண் : வரன் தேடும் வாலிபர்களே உஷார்!!
Author: Udayachandran RadhaKrishnan10 August 2021, 8:36 pm
திண்டுக்கல் : புதுச்சேரியை சேர்ந்த பெண் திருமணம் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டதையடுத்து பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் மாப்பிள்ளை ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் இங்கு வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருமணம் செய்வதற்காக கௌரி மேட்ரிமோனி மூலம் பெண்ணைத் தேடி உள்ளார்.
அப்பொழுது இடைத்தரகர்கள் மூலம் பாண்டிச்சேரி நேரு தெருவை சேர்ந்த சோபிகா என்ற பெண்ணை பார்த்துள்ளார். பெண் பிடித்துப்போகவே திருமணம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் அப்பொழுது தனக்கு தாய், தந்தை யாரும் இல்லை என்றும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சுனாமியில் இருவரும் இறந்து விட்டதாக பெண் சோபிகா கூறி உள்ளார்.
இதனை நம்பிய செல்லப்பாண்டி கடந்த 11.03.21 அன்று எளிமையான முறையில் பாண்டிச்சேரியில் வைத்து நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளார். நிச்சயதார்த்தத்தின் போது ஒன்றரை பவுன் செயின், பட்டுப்புடவை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சோபிகாவிடம் கொடுத்துள்ளார்.
அதன்பின் சோபிகாவிடமிருந்து கடந்த 5 மாதங்களாக எவ்விதமான தொடர்பும் இல்லை இதனால் சந்தேகமடைந்த செல்லப்பாண்டி தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரியில் உள்ள சோபிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் வீடு வாடகைக்கு விடப்படும் என பலகை இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லப்பாண்டி அருகில் உள்ளவரிடம் விசாரித்தபோது அந்தப் பெண் மோசடிப் பேர்வழி என கூறியுள்ளனர்.
இதேபோல் பலரையும் திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண்ணை பிடிப்பதற்காக திட்டம் தீட்டிய செல்லபாண்டி சோபிகாவின் உறவினரை தொடர்பு கொண்டு திருமணத்திற்காக புடவை மற்றும் நகை எடுக்க வேண்டும் ஆகையால் திண்டுக்கல்லுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனையடுத்து இன்று 10.08.21 திண்டுக்கல் வருகை தந்த சோபிகாவை பிடித்து வைத்துக் கொண்டு மோசடி செய்தது தொடர்பாக கேட்டபொழுது, சோபிகா தான் செய்தது தவறு என்றும் செல்லப்பாண்டி இடமிருந்து வாங்கிய நகை பட்டுப்புடவை பணம் ஆகியவற்றை திரும்பத் தருவதாக கூறியுள்ளார்.
இதனை ஏற்காத செல்லப்பாண்டி திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த சோபிகா மீது புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த பெண்ணை தந்திரமாகப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0