அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு… மரணத்துடன் விளையாடும் பொதுமக்கள் : கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்..?
Author: Babu Lakshmanan4 November 2021, 1:06 pm
திருப்பூர் : அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் கால்நடைகள் ஆற்றில் மேய்ச்சலுக்கு அனுப்பியும், பொதுமக்கள் நீராடியும் வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகவும், நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. 90 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 87.60 அடி உயரம் தண்ணீர் இருப்பதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பே திருப்பூர், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கரூர் நகரை ஒட்டிய ஆண்டான் கோவில் தடுப்பணைக்கு நேற்று வரை விநாடிக்கு 242 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1589 கன அடி தண்ணீர் கடந்து சென்று கொண்டுள்ளது.
அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீருடன் கரூர், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், உடுமைப்பேட்டை அணையிலிருந்து திறக்கப்பட்ட 2000 கன அடி தண்ணீர் இன்னும் இரு தினங்களில் கரூரை வந்தையும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வருடம் முழுவதும் வறண்டே கிடக்கும் அமராவதி ஆற்றில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்காக அனுப்பி வைப்பது வழக்கம். அதே போல தற்போதும் மேய்ச்சலுக்காக வரும் கால்நடைகள் வெள்ள நீரில் நீந்திச் செல்கின்றன. பொதுமக்களும் நீராடியும், துணி துவைத்தும் வருகின்றனர்.
0
0