ஓடிடி-யில் வெளியாகிறது சூர்யாவின் சூரரைப் போற்று..!

22 August 2020, 2:04 pm
Quick Share

“இறுதிச்சுற்று” சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் இசையில் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு, கடந்த செப்டம்பர் மாதம் நிறைவு பெற்றது.

இந்த சூழலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதாலும், திரையரங்குகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் இயல்பு நிலை திரும்பிய பிறகு இந்த படம் திரையரங்கில் வெளியாவதாக இருந்தது.

இந்த சூழலில் விநாயகர் சதுர்த்தியான இன்று நடிகர் சூர்யா வரும் அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் சூரரைப் போற்று படம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரின் படம் ஓடிடி தளத்தில் வெளியாவது இதுவே முதல் முறை. இதற்கிடையே நேரடியாக ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் நடிகர் சூர்யா அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், கடுமையான உழைப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களை சரியான நேரத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ள சூர்யா, சூரரைப்போற்று திரைப்பட வெளியீட்டு தொகையில் ரூ. 5 கோடியை பொதுமக்கள், திரையுலகினர், கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.