ரூ.20,000க்கு வாரம் ரூ.2,000 வட்டியா..? கழுத்தை நெறிக்கும் கந்துவட்டி ; விரக்தியில் தீக்குளிக்க முயன்ற 80 வயது முதியவர்!!

Author: Babu Lakshmanan
30 January 2023, 5:34 pm
Quick Share

நெல்லை : நெல்லையில் 20 ஆயிரம் ரூபாய் கடனுக்கு வாரம் 2000 ரூபாய் கந்து வட்டி வசூலிக்கும் நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத விரக்தியில், 80 வயது முதியவர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே நம்பித்தலைவன் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (80). இவர் அதே பகுதியை சேர்ந்த மலையப்பன் என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

இதற்காக மலையப்பன் ஆறுமுகத்திடம் வாரம் 2000 ரூபாய் வட்டி பணமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. 20,000 ரூபாய் கடனுக்கு வாரம் 2000 ரூபாய் வட்டி மட்டுமே செலுத்துவதால் ஆறுமுகம் கடனை அடைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக வட்டி பணம் கொடுக்காததால் மலையப்பன் ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று அவரை அசிங்கமாக திட்டியதோடு ஆறுமுகத்தின் மனைவியை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மலையப்பன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆறுமுகம் இன்று தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

அப்போது திடீரென ஆறுமுகம் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடம்பில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் முதியவர் ஆறுமுகத்தை தடுத்து நிறுத்தி அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் அனைவரையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இது குறித்து சத்தியவாணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- எனது கணவர் கூலி வேலை செய்கிறார். நான்கு மாதமாக வட்டி பணம் கொடுக்க முடியவில்லை. அதனால் மலையப்பன் அடிக்கடி வீட்டிற்கு வந்து எங்களை மானபங்கப்படுத்துகிறார். அதனால் தான் மணமடைந்து எனது கணவர் தீக்குளிக்க முயன்றார். என்று கண்ணீருடன் தெரிவித்தார். ஆறுமுகத்தின் மகன் செல்வன் கூறும்போது, 20 ரூபாய் கடனுக்கு வாரம் 2000 ரூபாய் வட்டி மட்டுமே கொடுத்து வந்தோம். நான்கு மாதமாக வட்டி கொடுக்க முடியவில்லை.

இதனால் எனது தந்தையை மிக கேவலமாக திட்டினார். இதனால் மனமுடைந்து நான் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றேன். ஜாதி பெயரை சொல்லி திட்டுகிறார். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு கந்துவட்டி கொடுமையால் இரண்டு குழந்தைகளுடன் கணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். தொடர்ந்து மீண்டும் நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை அதிகரித்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், இன்று 80 வயது முதியவர் கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் அலுவலகத்திற்குள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Views: - 399

0

0