தூதுவனாக செல்ல நான் தயார்… ஏழை விவசாயிகளை அழைத்துச் செல்ல உங்க மாமா விமானத்தை அனுப்புவாரா..? திமுக எம்பி தயாநிதிக்கு அண்ணாமலை பதிலடி

Author: Udhayakumar Raman
31 July 2021, 10:17 pm
Quick Share

கடந்த சில மாதங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்பதில் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா முதல் தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வரை உறுதியாக உள்ளனர். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இது குறித்து தமிழகம் மற்றும் கர்நாடக முதலமைச்சர்கள் பிரதமரை நேரில் சந்தித்து தங்கள் மாநிலத்திற்கான கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கர்நாடக ஆளும் பாஜக மேகதாதுவில் அணை கட்ட பிடிவாதமாக இருந்து வரும் நிலையில், மேகதாதுவில் அணைக்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம் என தமிழக பாஜக கூறியிருந்தது. மேலும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக என்றுமே இருப்போம் எனக் கூறிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, ஆக.,5ம் தேதி கர்நாடகா அரசுக்கு எதிராக போராட்டத்தையும் அறிவித்தார்.

இது குறித்து பேசிய கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும், யார் உண்ணாவிரதம் இருந்தாலும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவது உறுதி எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், கர்நாடகா மற்றும் தமிழக பாஜகவினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனை தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. இதன் ஒருபகுதியாக, இன்று பேட்டியளித்த திமுக எம்பி தயாநிதி மாறன், கர்நாடக முதலமைச்சர் உடன் பேச்சுவார்த்தை நடத்த மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என கிண்டலாக கூறினார்.

இந்த நிலையில், திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது டி20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள்… மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி.தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா திரு முக ஸ்டாலின் அனுமதிப்பாரா?,” என தெரிவித்துள்ளார்.

Views: - 457

0

0