வாணி ஜெயராமை தொடர்ந்து அடுத்த மரணம்.. சோகத்தில் திரையுலகம் : கல்லூரி நண்பன் குறித்து CM உருக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2023, 11:58 am

பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்தவர் டி.பி.கஜேந்திரன். வீடு மனைவி மக்கள், பாண்டி நாட்டு தங்கம், சீனா தானா, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

நேற்று பழம்பெரும் பாடகி வாணிஜெயராம் உயிரிழந்த நிலையில் இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:- பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான டி.பி.கஜேந்திரன் மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம் போன்ற பல வெற்றி படங்களை டி.பி.கஜேந்திரன் இயக்கி உள்ளார். பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி கலை உலகுக்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.

2021 செப்டம்பரில் டி.பி.கஜேந்திரனை நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன். தற்போது எதிர்பாராதவிதமாக டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது வேதனை அளிப்பதாக முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?