போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்த சம்பவம்: தலைமறைவாக இருந்த மைய உரிமையாளரின் கணவர் நீதிமன்றத்தில் சரண்..!!

Author: Rajesh
7 May 2022, 12:31 pm
Quick Share

சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மறுவாழ்வு மையத்தின் உரிமையாளரின் கணவர் கார்த்திகேயன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சென்னை ராயப்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜ். இவர் ஆட்டோவுக்கு பாடி கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, குடி பழக்கத்திலிருந்து விடுபட சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கு தனது மனைவி கலாவுடன் சென்றுவிட்டு திரும்பிய ராஜ் மது அருந்தியிருந்த நிலையில், மீண்டும் மனைவி கலாவுடன் வாக்குவாதம் செய்து பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மனைவி கலா மற்றும் குடும்பத்தினர் இணைந்து ராயப்பேட்டை பகுதியில் உள்ள “Madras Care Centre” என்ற போதை மறுவாழ்வு மையத்துக்கு தகவல் தெரிவிக்க, மது போதைக்கு அடிமையான கணவரை போதை மறுவாழ்வு மையத்தினர் நள்ளிரவில் அழைத்து சென்றனர்.

இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் ராஜ் உயிரிழந்துவிட்டதாக போதை மறுவாழ்வு மையத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் அதிர்ச்சியடைந்த மனைவி கலா மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ராஜின் உடலில் பலத்த ரத்த காயங்களுடன் பற்கள் உடைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.

வழக்கின் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த மையத்தின் உரிமையாளரின் கணவரான கார்த்திகேயன் கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 447

0

0