“எனக்கு கல்யாணம் பண்ணி வை“ : தந்தையை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற மகன்.!!

1 July 2020, 1:24 pm
Ariyalur Father Murder -Updatenews360
Quick Share

அரியலூர் : திருமணம் செய்து வைக்காததால் தந்தையை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொங்குநாட்டர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 65) விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகன் ஒருவருக்கும் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் அடுத்த இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க சக்கரவர்த்தியால் முடியவில்லை. மூன்றாவது மகன் கலியமூர்த்தி ( வயது 35). இவர் வெல்டிங் வேலை செய்து வருகின்றார். கூலியாக கிடைக்கும் பணத்தை அவ்வப்போது போதைக்கு செலவு செய்து விடுவார்.

இந்நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவு வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபொழுது திண்ணையில் தந்தை சக்கரவர்த்தி படுத்திருந்த போது அவரிடம் கலியமூர்த்தி தகராறு செய்துள்ளார்.

சக்கரவர்த்திக்கும் கலியமூர்த்திக்கும் வாக்குவாதம் அதிகமாக, அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து சக்கரவர்த்தியை தாக்கியுள்ளார் இதில் தலையில் பலத்த காயமடைந்த சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

தகவல் அறிந்ததும் கலியமூர்த்தி தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் தப்பி ஓடிய கலியமூர்த்தி தேடி வந்த நிலையில் அதிகாலை அதே பகுதியில் மறைந்திருந்த கலியமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.