ஒவ்வொரு நாளும் 36 தற்கொலைகள்..! வேறெங்குமல்ல தமிழகத்தில் தான் இந்த அவல நிலை..!

3 October 2020, 7:57 pm
Depression_UpdateNews360
Quick Share

தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக, தற்கொலைகளின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 36 பேர் தற்கொலை எனும் தீவிர முடிவை எடுக்கின்ற அதிர்ச்சித் தகவலும் இதில் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 2019’ஆம் ஆண்டில் மொத்தம் 13,493 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது ஒட்டு மொத்த நாட்டில் 9.7% பங்கைக் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிராவில் 18,916 தற்கொலைகள் அரங்கேறியுள்ளது. மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கம் 12,665 தற்கொலைகளை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் ஆவடியில் தற்கொலை செய்தனர். ஒரு மாதத்திற்குப் பிறகு, ஐ.ஐ.டி-மெட்ராஸைச் சேர்ந்த இளம் கல்லூரி மாணவி பாத்திமா லத்தீப், ஆசிரியர்களிடமிருந்து பாகுபாடு காரணமாக தற்கொலை செய்தார். பிப்ரவரி மாதத்தில், 26 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் பணியில் இருந்தபோது தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இவையனைத்தும் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட சில விஷயங்கள் மட்டுமே.

நாட்டில் குடும்ப தற்கொலைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 16 வெவ்வேறு விவகாரங்களில் 43 பேர் குடும்பமாக இறந்துள்ளனர். இதேபோல், 914’க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை எனும் தீவிர முடிவை எடுத்துள்ளனர். மாணவர் தற்கொலைகளில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2019’ல் 200 பேருடன் அரசு ஊழியர்கள் தற்கொலைகளிளும் தமிழகமும் முதலிடத்தில் உள்ளது.

என்.சி.ஆர்.பி தரவுகளின்படி, மாநிலத்தில் 50 சதவிகித தற்கொலைகள் குடும்ப பிரச்சினைகள் தொடர்பானவை. அதன்பிறகு 18 சதவிகித தற்கொலைகள் நோய்வாய்ப்பட்டு அதனால் ஏற்படும் மன உளைச்சலால் நடந்துள்ளன.

18 வயதிற்குட்பட்டவர்களில் சிறுமிகள் சிறுவர்களை விட அதிக அளவில் தற்கொலை செய்கிறார்கள் என்றும் தரவு குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் ஆண்களில் 30-45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் தற்கொலை எனும் தீவிர முடிவை எடுக்கிறார்கள்.

மாநிலத்தில், சென்னை 2461 எனும் எண்ணிக்கையுடன் மாநிலத்தில் தற்கொலைகளில் முதலிடத்தில் உள்ளது. சென்னையைத் தொடர்ந்து மதுரையில் 345, கோயம்புத்தூரில் 338 மற்றும் திருச்சியில் 188 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.

தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்க தமிழகத்தின் சுகாதாரத்துறை ஹெல்ப்லைன் எண் 104’ஐ இயக்கி வருகிறது. இருந்தும் ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில், அரசு இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என உளவியல் ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

Views: - 51

0

0