வாக்குச்சாவடியில் பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல் : மாநகர காவல் துணை ஆணையரிடம் பாஜக புகார்…

Author: kavin kumar
19 February 2022, 11:08 pm
Quick Share

நெல்லை : நெல்லையில் வாக்குச்சாவடியில் பாஜக பெண் வேட்பாளரை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் மாநகர காவல் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. நெல்லை மாநகராட்சி வார்டு எண் 26க்குட்பட்ட வாக்குச்சாவடி நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள மந்திரமூர்த்தி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது 8க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் ஒரே மையத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் அந்த வாக்குச்சாவடி மையம் பதற்றமான வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளது உதவி ஆய்வாளர் தலைமையில் வாக்குச் சாவடியை சுற்றி போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாலை 5 மணியுடன் பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்யும் நேரம் நிறைவு பெற்ற நிலையில் மீதம் உள்ள ஒரு மணி நேரம் கொரனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி வார்டு 26 குட்பட்ட வாக்குச்சாவடி எண் 148ல் வாக்குச்சாவடி முகவர் ஒருவர் புதிதாக வந்ததாக கூறப்படுகிறது. அந்த முகவரை தடுத்து நிறுத்த பாஜக வேட்பாளர் மாரியம்மாள் என்பவர் முயற்சி செய்ததாகவும், அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக வேட்பாளர் தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக வேட்பாளர் மாரியம்மாள் வாக்குச்சாவடி மையத்தில் உற்ற உயரமான மேடையில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. திமுக பிரமுகர் தாக்கி தள்ளி விட்டதாலேயே அவர் காயமடைந்ததாக பாஜக முகவர்கள் மற்றும் கட்சியினர் குற்றம் சாட்டி, வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும்காயமடைந்த மாரியம்மாளை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து பாஜக நிர்வாகிகள் மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சுரேஷ்குமாரிடம் வேட்பாளரை தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இந்த சூழலில் போலீசார் திமுக பிரமுகர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாக்குச்சாவடி அதிகாரிகள் அங்கிருந்த முகவர்கள் உள்ளிட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Views: - 705

0

0