பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு.!!

7 August 2020, 3:47 pm
Cbe Ministers Inspection - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்து அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் இருந்து கடந்த மூன்று தினங்களாக 10,000 கன அடியில் இருந்து 32,000 கன அடி தண்ணீர் வரை அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீரானது பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நான்காவது நாளாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இங்குள்ள வெள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

பவானி ஆற்றில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் இவ்வாண்டு அதுமாதிரி ஏற்பட்டால் அதனை சமாளிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டு முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளதாக கூறினார்.

கடந்தாண்டு தென்மேற்கு பருவமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் 80,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனை தடுக்கவும் பொதுமக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கவும் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை மேடான பகுதிகளுக்கு அனுப்ப அரசு சார்பில் 300 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்

Views: - 0

0

0