பாஜக பிரமுகரின் டீக்கடை அடித்து உடைப்பு : திமுக பஞ்சாயத்து தலைவர் தலைமறைவு.. 5 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
1 August 2022, 9:41 pm
Quick Share

நெல்லையில் பாஜக பிரமுகரின் டீக்கடையை அடித்து உடைத்த வழக்கில் திமுக பிரமுகர் தலைமறைவான நிலையில், அவரது அடியாட்கள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நெல்லை – அரியகுளம் சாரதா கல்லூரி எதிரே பாஜகவின் தமிழ் வளர்ச்சி பிரிவு நெல்லை மாவட்ட தலைவர் வேல் கண்ணன் என்பவருக்கு சொந்தமான டீக்கடை உள்ளது. அவரது டீக்கடையில் பாஜக ஆதரவு பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரை மேல் புத்தனேரி பஞ்சாயத்து தலைவரும், திமுக பிரமுகருமான மனோஜ் ஆனந்த் மற்றும் அவரது தந்தை கண்ணன் உள்ளிட்ட சிலர் கிழித்துள்ளனர்.

இது தொடர்பாக வேல் கண்ணன் திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 29ம் தேதி இரவு வேல் கண்ணனின் டீக்கடைக்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கடையை அடித்து உடைத்தனர். கடையில் பணிபுரியும் பாலசுப்பிரமணியம் என்பவரையும் தாக்கியுள்ளனர். அதோடு, கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவங்களை அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனிடையே, பாஜக நிர்வாகியின் கடை தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட பாஜக சார்பில் காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய மேல புத்தினேரி பஞ்சாயத்து தலைவர் மனோஜ் ஆனந்தை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்பேரில் திமுக பிரமுகரான வேலவன்குளம் கண்ணனின் அடியாட்கள் 5 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் செல்போன் வீடியோ பதிவு அடிப்படையில் திமுக பஞ்சாயத்து தலைவர் மனோஜ் ஆனந்த் உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 550

0

0