தாய் , மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர்: 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு

16 July 2021, 2:56 pm
Quick Share

சென்னை: சென்னையில் தாய் , மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு தலைவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

சென்னை எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி.இவர் பாரதிய ஜனதா கட்சியில் பெரம்பூர் கிழக்கு பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இவர் மீது அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கும் தனது மகளுக்கும் பாலியல் தொல்லை தருவதாக கூறி கடந்த 12 ஆம் தேதி காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது 15 மற்றும் 9 வயது மகள் இருவரும் பள்ளியில் பயின்று வருவதாகவும், எதிர் வீட்டில் வசித்து வரக் கூடிய பாஜக பிரமுகர் பார்த்த சாரதி தொடர்ந்து தனக்கும் , தனது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இது குறித்து ஏற்கெனவே கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் கடந்த 2018 ஆம் ஆண்டு பார்த்த சாரதி கைது செய்யப்பட்டு அன்றைய தினமே ஜாமீனில் வெளியே வந்ததாக தெரிவித்துள்ளார்.

வெளியே வந்த பார்த்தசாரதி மீண்டும் பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கி விட்டதாகவும், உடனடியாக பார்த்தசாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக பார்த்தசாரதி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். குறிப்பாக ஆபாச செயலை புரிதல், குந்தகம் விளைவிக்கும் வகையில் நடத்தல், பாலியல் அத்துமீறல், குற்றம் கருதி மிரட்டல், பெண்ணை அவமானபடுத்தும் வகையில் செயல்படுதல், பெண் வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Views: - 121

0

0