ஆளுநரை வைத்து ஆட்சி மாற்றம் செய்ய முயற்சியா…? பொய் சொல்லும் திருமாவளவன்… போட்டு தாக்கிய அமைச்சர்!!

Author: Babu Lakshmanan
22 April 2022, 5:36 pm
Quick Share

ஆளுநரை வைத்து ஆட்சி மாற்றம் செய்ய பாஜக நினைப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கருத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதிலளித்துள்ளார்.

பாஜக மீது எதிர்கட்சிகள் தொடர்ந்து வெறுப்பு அரசியலை செய்து வருவதாகவும், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், ஆளுநர் மூலம் ஆட்சி மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது :- புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கம்பன் கலையரங்கில் நடைபெற உள்ள அரசு விழாவில் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி ஆணையை வழங்க உள்ளார். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் குமரகுரு பள்ளத்தில் அடுக்குமாடி கட்டும் பணியையும், கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.70 கோடியில் புதிய புறப்பேருந்து நிலையம் கட்டவும், ரூ.30 கோடி செலவில் புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை போடும் பணியையும் தொடங்கி வைக்க உள்ளார், எனக் கூறினார்.

மேலும், ஆளுநரை வைத்து புதுச்சேரியில் பாஜக ஆட்சி மாற்றத்தை உருவாக்க முயல்வதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், எதிர்கட்சிகள் பாஜக மீது வெறுப்பு அரசியல் மீது செய்து வருவதாகவும், பாஜக எது செய்தாலும் அதில் எதிர்கட்சியினர் அரசியல் செய்து வருவதாகவும், தொடர்ந்து பொய் குற்றைச்சாட்டை எதிர்கட்சிகள் கூறி வருவதாக தெரிவித்த நமச்சிவாயம், ஆளுநரை வைத்து புதுச்சேரியில் பாஜக ஆட்சி மாற்றத்தை கொண்டு வர ஒருபோதும் நினைத்தில்லை என்றும், முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடரும் என்றும் தெரிவித்தார்.

Views: - 972

0

0