கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு பாஜக வைத்திருக்கும் ‘ஆப்பு‘! இரட்டை வேடத்தை இரண்டாக உடைக்க திட்டம்!!
17 September 2020, 4:32 pmசென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அண்ணாமலையை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் 2021ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியனர் படு தீவிரமாக தேர்தலில் வெற்றி வாகை சூட களப்பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியை முறியடிக்க தமிழக பாஜக தனி கவனம் செலுத்தி வருகிறது.
தேர்தலில் தொடர்ச்சியாக ஒரே தொகுதியில் நின்று வெற்றிக்கனி பறிப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் கொளத்தூர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு இரண்டு முறையும் வென்றவவர் ஸ்டாலின். இந்த வெற்றியை குறிபார்த்து சுட அண்ணாமலை என்ற ஆயுதத்தை பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டால் அவருக்கு எதிராக அண்ணாமலையை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலினுக்கு எதிராக இளைஞர் சக்தியை திரட்ட நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, இந்தி விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை கிழித்து காட்ட அண்ணாமலை சரியானவர் என பாஜக மேலிடம் கணித்துள்ளது.
திமுகவில் உள்ள வாரிசு அரசியலை ஸ்டாலின் ஊக்குவித்தால் அண்ணாமலை பிரச்சாரத்தின் மூலம் எதிர்கொள்வார் என்றும், அப்படி பிரச்சாரம் செய்தால் தமிழகத்தில் எதிரொலிக்கும் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் களமிறங்கினால், எதிர்த்து போட்டியிட அண்ணாமலை தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.