‘பொய் வாக்குறுதியால் ஆட்சிக்கு வந்த திமுக’ : சென்னையில் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆர்ப்பாட்டம்

Author: Babu
30 July 2021, 7:11 pm
Annamalai 1 - updatenews360
Quick Share

சென்னை ; தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை திமுக வெளியிட்டது. இந்தத் தேர்தலிலும் திமுக மாபெறும் வெற்றியைப் பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்களை நெருங்கி வரும் வேளையில், தேர்தல் வெற்றிக்கு காரணமான கோரிக்கைகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

admk protest -updatenews360

இதனிடையே, அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அவரவர் வீடு முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மீனவர்களுக்கான மானியம் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து விட்டு, அதனை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மீனவர் அணி சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார். அப்போது, பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததாகவும், ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக சாமானிய மக்களை ஏமாற்றும் திமுகவின் உண்மை முகத்தை தமிழக பாஜக தோலுரித்து காட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடத்தப்படும் முதல் போராட்டம் என்பதால், அண்ணாமலைக்கும் இனி வரும் நாட்களில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

Views: - 174

0

0