குமரியில் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து விபத்து : முகத்துவாரம் சரி செய்யாததே காரணம் என மீனவர்கள் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2021, 1:41 pm
Boat Accident - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் முகத்துவாரம் பழுதடைந்து வருடங்கள் ஆகியும் சரிசெய்யப்படாததே காரணம் என மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஏற்பட்ட கடற்சீற்றத்தின் போது இரையுமன்துறை பகுதியில் உள்ள முகத்துவாரம் இடிந்து சேதமடைந்தது.

மேலும் துறைமுக முகத்துவாரம் பகுதியில் மணல் மேடுகள் அமைந்ததின் காரணமாக பல படகுகள் அந்த பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்படட்டதில் 5 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியாகினர்.

இதனை தொடர்ந்து மீனவர்கள் முகத்துவாரப்பகுதியில் குவிந்து கிடக்கும் மணலை மாற்றி முகத்துவாரத்தை சரி செய்ய தொடர் போராட்டங்கள் நடத்தியதின் பேரில் அதிமுக தலைமையிலான அரசு ட்ரென்ச் மெசின் மூலம் மணலை அகற்றும் பணியை செய்தனர்.

மேலும் சேதமடைந்த இரையுமன்துறை முகத்துவாரப்பகுதியை சீரமைத்து துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய 77 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடும் செய்தது. இந்த பணம் ஒதுக்கபட்டு மாதங்கள் பல கடந்த பின்னரும் துறைமுக முகத்துவாரத்தை சீரமைக்கும் பணி இதுவரை துவங்கபடவல்லை.

இதனால் துறைமுக முகத்துவாரப்பகுதியில் கடந்த சில நாட்களாக மீண்டும் பைபர் படகுகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு கடலுக்கு பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று காலை கரை திரும்பி வரும் போது முகத்துவாரப்பகுதியில் ராட்சத அலை ஒன்றில் சிக்கி பைபர் படகு ஒன்று கடலுக்குள் கவிழ்ந்தது.இதில் படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் நீந்தி கரை சேர்ந்தனர்.

மேலும் படகில் இருந்த மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் கடலுக்குள் மூழ்கின. தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதை தடுக்க உடனடியாக ஆபத்தான வடிவமைப்பில் அமைக்கப்பட்டிருக்கும் துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்து பாதுகாப்பான துறைமுகமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 294

0

0